Monday, August 15, 2011

Lokpal Vs Jan Lokpal

Lokpal Vs Jan Lokpal
==================================================================================================
லோக்பால் Vs ஜன் லோக்பால்
'லோக்பால் மசோதா' என்று பேசாத மத்திய அரசு கிடையாது. இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை. இப்போது, அன்னா ஹஸாரேயின் தலைமையை ஏற்றுள்ள, முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஜே.எம். லிங்டோ, முன்னாள் தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் சங்கர், சமூக ஆர்வலர்களான நிகில் தேவ், சேகர் சிங், அரவிந்த் கேஜ்ரிவால், வழக்கறிஞர்கள் சாந்திபூஷண், பிரசாந்த் பூஷண் மற்றும் முன்னாள் தலைமை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் பிரத்யு சின்ஹா போன்றவர்கள் 'ஜன் லோக்பால் மசோதா' என்ற ஒன்றை தயாரித்தனர்.



அன்னா ஹஸாரே

அரசின் மசோதாவை நிறைவேற்றக் கூடாது, தங்களது ஜன் லோக்பால் மசோதாவை ஏற்று சட்டமாக்க வேண்டும் என்று அன்னா ஹஸாரே தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. அரசின் மசோதாவில் திருத்தங்களைச் செய்வது, அந்தத் திருத்தங்களில் ஜன் லோக்பால் மசோதாவின் அம்சங்களைச் சேர்ப்பது என்ற நோக்கத்துடன், அரசு மற்றும் 'ஊழலுக்கு எதிராக இந்தியா' இயக்கத்தின் பிரதிநிதிகளையும் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.



பிரசாந்த் பூஷண்

அரசின் மசோதாவையும், ஜன் லோக்பால் மசோதாவையும் சுருக்கமாக ஒப்பீடு செய்து பார்ப்போம். அரசு மசோதாவின்படி, ஊழல் புகார்களை பொதுமக்களிடமிருந்து லோக்பால் அமைப்பு நேரடியாகப் பெற முடியாது. மக்களவை உறுப் பினர்கள் மீதான புகார் என்றால், அவற்றை சபாநாயகரிடமும், மாநிலங்களவை உறுப்பினர்கள் மீதான புகார் என்றால், அவற்றை மாநிலங்களவைத் தலைவரிடமும்தான் தர வேண்டும். அவர்கள் விரும்பினால் புகார்களை லோக்பால் அமைப்பிற்கு அனுப்புவார்கள்.

ஆனால், ஜன் லோக்பால் மசோதா விதிமுறைகளின்படி, யாரும் புகார் அளிக்காமலேயே கூட லோக்பால் அமைப்பு தன்னிச்சையாக விசாரித்து, தீர்ப்பு வழங்கும். பொதுமக்களிடம் இருந்தும் நேரடியாகப் புகார்களைப் பெற்றுக் கொள்ளும். இதற்காக யாருடைய அனுமதியும் தேவையில்லை.

அரசு மசோதாவின்படி லோக்பால் அமைப்பு, எந்தவொரு புகாரையும் விசாரித்து அறிக்கை தயாரித்து மக்களவை சபாநாயகருக்கோ, மாநிலங்களவைத் தலைவருக்கோ அனுப்பி வைக்கும். லோக்பால் அமைப்பின் பரிந்துரைகளை ஏற்பதும், நிராகரிப்பதும், ஏற்றுக் கொண்டால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதைத் தீர்மானிப்பதும் அவர்கள்தான்.

ஆனால், ஜன் லோக்பால் மசோதாவின்படி லோக்பால் அமைப்பு ஊழல் புகாருக்குள்ளான எந்தவொரு பொது ஊழியருக்கு எதிராகவும், விசாரணைக்கு உத்திரவிட முடியும். விசாரணையை முடித்து ஒழுங்கு நடவடிக்கைக்கும் உத்திரவிட முடியும்.

அரசு மசோதாவின்படி, லோக்பால் அமைப்பிற்கு காவல்துறையின் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது. அதனால் முதல் தகவல் அறிக்கை எனும் எஃப்.ஐ.ஆரைப் பதிவு செய்யும் அதிகாரம் லோக்பால் அமைப்பிற்கு இல்லை. லோக்பால் விசாரணை என்பது காவல்துறை விசாரணைக்கு முந்தைய துவக்க விசாரணையைப் போன்றதுதான். லோக்பால் அமைப்பின் விசாரணை அறிக்கை சபாநாயகராலும் மாநிலங்களவைத் தலைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கூட, அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வது யார்? வழக்கை நடத்தப் போவது யார்? அதற்காக அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிப்பது யார் என்ற கேள்விகளுக்கு, அரசு மசோதாவில் விளக்கம் எதுவும் இல்லை.
ஜன் லோக்பால் மசோதாவின்படி, லோக்பால் அமைப்பு காவல்துறையின் அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கும். அதுவே எஃப்.ஐ.ஆரைப் பதிவு செய்யும். புலனாய்வை நடத்தும். நீதிமன்றம் போல வழக்கையும் நடத்தும்.

லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, ஸி.பி.ஐ.யின் பங்கு என்னவாக இருக்கும்? ஸி.பி.ஐ. விசாரிக்கும் புகார்களையே லோக்பால் அமைப்பும் விசாரிக்குமா, அல்லது அரசியல்வாதிகளை விசாரிக்கும் அதிகாரத்தை ஸி.பி.ஐ. இழந்து விடுமா என்பதும் தெரியவில்லை. (அரசியல்வாதிகள் தொடர்பான ஊழல் புகார்களை இப்போது ஸி.பி.ஐ. விசாரித்து வருகிறது).

ஜன் லோக்பால் மசோதாவின்படி ஊழல் புகார்களை விசாரணை செய்யும் ஸி.பி.ஐ.யின் பிரிவு, லோக்பாலுடன் இணைக்கப்படும். அதன் மூலம் ஊழல் புகார்களை விசாரணை செய்யும் திறமையான மற்றும் சுதந்திரமான அமைப்பாக அது செயல்படும்.

பொய்யான ஊழல் புகார்களைக் கொடுக்கிறவர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கும் அதிகாரம், அரசு மசோதாவின்படி லோக்பால் அமைப்பிற்கு உண்டு. ஜன் லோக்பால் மசோதாவின்படி, பொய்யான குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும்.

அரசு மசோதாவின்படி, லோக்பால் அமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு எதிரான புகார்களை மட்டுமே விசாரிக்கும். அதிகாரிகளின் ஊழல்களை விசாரணை நடத்த அதற்கு அதிகாரம் இல்லை.

ஆனால், அரசியல்வாதிகளின் ஊழல்கள் மட்டுமின்றி, அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளின் ஊழல்களும் லோக்பால் அமைப்பின் விசாரணைக்கு உட்பட்டது என்கிறது ஜன் லோக்பால் மசோதா. சி.வி.சி. என்கிற தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையமும், அதன் மொத்த அமைப்பும், லோக்பால் அமைப்புடன் இணைக்கப்படும் என்றும் அது கூறுகிறது.

லோக்பால் அமைப்பு மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அந்த மூன்று உறுப்பினர்களும் ஓய்வு பெற்ற நீதிபதிகளாக இருப்பார்கள் என்கிறது அரசு மசோதா.
ஜன் லோக்பால் மசோதா, லோக்பால் அமைப்பு தலைவர் மற்றும் பத்து உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அவர்களில் நான்கு பேர், சட்டத் துறையிலிருந்து தேர்வு செய்யப்படுவார்கள். (அவர்கள் நீதிபதிகளாக இருக்கத் தேவையில்லை, மற்றவர்கள் எந்த பின்னணியைக் கொண்டவர்களாகவும் இருக்கலாம் என்கிறது).

குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், பாராளுமன்ற இரு அவைகளின் தலைவர்கள், இரு அவைகளின் எதிர்க் கட்சித் தலைவர்கள், சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோர் லோக்பால் அமைப்பின் தலைவரையும், அதன் உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் குழுவில் இடம் பெறுவார்கள் என்கிறது அரசு மசோதா.

ஆனால், ஜன் லோக்பால் மசோதாவின்படி, லோக்பால் தலைவரையும் அதன் உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் குழுவில் நீதித் துறையைச் சேர்ந்தவர்கள், தலைமை தேர்தல் ஆணையர், கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல், நோபல் பரிசு, மக்சேசே விருது போன்ற சர்வதேச அளவிலான விருதுகளைப் பெற்ற இந்தியர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள்.

பிரதமருக்கு எதிராகவோ, வெளியுறவுத் துறை விவகாரங்கள் தொடர்பாகவோ, பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பாகவோ விசாரணை நடத்தும் அதிகாரம், அரசின் மசோதாவின்படி லோக்பால் அமைப்பிற்கு இல்லை. ஆனால், ஜன் லோக்பால் மசோதாவின்படி அந்தக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

ஒரு ஊழல் புகார் குறித்து விசாரணை செய்து முடிக்க ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டு வரையிலான கால நிர்ணயத்தை அரசு மசோதா அனுமதிக்கிறது. அதே சமயம், வாத பிரதிவாதங்களை முடிக்க கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை.

ஜன் லோக்பால் மசோதாவின்படி, புகார் குறித்த புலனாய்வு ஒரு ஆண்டிற்குள் முடிக்கப்பட வேண் டும். அடுத்த ஒரு ஆண்டிற்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கி முடிக்கப்பட வேண்டும்.

புகார் அளிக்கிறவர்கள் கொல்லப்படுவதும் நடக்கிறது. ஊழல் புகார் அளிக்கிறவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு மசோதாவில் அதிகாரம் இல்லை. ஜன் லோக்பால் மசோதாவின்படி, பாதிக்கப்படும் புகார்தாருக்குப் பாதுகாப்பு அளிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்பிற்கு உண்டு.
ஊழல் செய்து சட்ட விரோதமாகத் திரட்டப்பட்ட பணத்தைப் பறிமுதல் செய்கிற சட்டம் எதுவும் நடைமுறையில் இல்லை. ஊழல் புரிந்தவர்கள் சிறைத் தண்டனை முடித்து வெளியில் வந்த பிறகு, ஊழலில் சேர்த்த பணத்தைக் கொண்டு வசதியான வாழ்க்கையை அனுபவிப்பது வழக்கமாக இருக்கிறது.

ஊழலின் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை எல்லா குற்றவாளிகளிடம் இருந்தும் வசூலிக்க, லோக்பால் அமைப்பிற்கு அதிகாரம் அளிக்கப்படும் என்கிறது ஜன் லோக்பால் மசோதா.

தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி, ஊழல் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதத் தண்டனையும், அதிகபட்சமாக ஏழு ஆண்டு தண்டனையும் வழங்க முடியும். ஆனால், ஜன் லோக்பால் மசோதாவின்படி குறைந்தபட்ச தண்டனை ஐந்து ஆண்டுகளாகவும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையாகவும் உயர்த்தப்படும்

No comments:

Post a Comment