Wednesday, November 23, 2011

மனதை தொட்ட கீதை

விமரிசனம் வலைத்தளம் ஆசிரியர் கவேரிமைந்தனின்
மனதை தொட்ட கீதை
=========================================
ஜெயமோகன் எழுத்துக்கள் மிக ஆழமானவை. மேலோட்டமாக எதையும் எழுதும் பழக்கம் அவருக்கு இல்லை. ஆழ்ந்த வாசிப்பிற்கும், தீர்க்கமான சிந்தனை  அலசல்களுக்கும் பிறகு தான் அவர் எழுதுகிறார். நான் அவர் உழைப்பை மிகவும் மதிக்கிறேன். முன்னதாக பல சமயங்களில் அவர் கீதையைப் பற்றி விளக்கங்கள் எழுதி இருந்தாலும், அண்மையில் ஒரு பேட்டியில் அவர் - 1987ல் தன் அம்மாவும்,அப்பாவும் தொடர்ச்சியாக
5 மாத இடைவெளிக்குள் இறந்தவுடன்,வாழ்க்கை வெறுத்துப் போய் தற்கொலை செய்து கொள்ள முயன்று, மீண்டுவந்த தருணத்தில்,
தனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை  இணைத்து சில விஷயங்களை சொல்லி இருக்கிறார். அவற்றிலிருந்து - ————————
என்ன நடந்ததுன்னு தெரியவில்லை. என் மனசு அப்படியே மலர்ந்து ஜொலிக்க ஆரம்பிச்சிட்டது. நான் பலசமயம் துண்டு துண்டா படிச்ச கீதை
அப்பதான் எனக்கு புரிஞ்சுது. கீதையை எல்லாருமே வாசிக்கலாம். ஆனா கீதை உள்ளே போறதுக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கு. அதை கீதா முகூர்த்தம்னு சொல்வாங்க. எனக்கு அந்த நாள் தான் கீதா முகூர்த்தம். கீதை சொல்றதை அந்த நாளிலே –  அந்த நேரத்திலே புரிஞ்சுகிட்டேன்.
ஒவ்வொரு உயிருக்கும் அது மட்டுமே செய்ய வேண்டிய செயல் இருக்கு. அது தான் சுவதர்மம்னு கீதை அதைச் சொல்லுது. அதைச் செய்ற நிறைவுதான் பேரின்பம். …அந்த நொடியிலே இருந்து என் வாழ்க்கை வேறு ஒண்ணா ஆயிடுச்சு. இனி என் வாழ்க்கையிலே
எதுக்கும் துக்கப்பட மாட்டேன். எந்த ஒரு கணத்திலேயும் சோர்வா இருக்க மாட்டேன்னு முடிவு எடுத்தேன். இருபத்தஞ்சு வருசம் தாண்டியிருக்கு.
வீணான ஒரு நிமிஷம்கூட என் வாழ்க்கையிலே இல்லை. நான் எப்பவுமே என்னோட பெஸ்ட் மூடிலே தான் இருந்துட்டிருப்பேன்.
இத்தனை வருஷங்களிலே நான் இவ்வளவு எழுதி இருக்கேன் - இவ்வளவு வாசிச்சிருக்கேன்னா அதுக்கு  இந்த ஊக்கம் தான் காரணம்.
கீதை நமக்கு ஆன்மீகமான ஒரு  தன்னம்பிக்கையை குடுக்குது. மத்த தன்னம்பிக்கை நூல்கள்லாம் - உன்னால முடியும்.
நீ பெரிய ஆள்னு சொல்லுறப்ப -கீதை,  நீ ரொம்ப சின்ன ஆள். ஆனா நீ பிரம்மாண்டமான ஒரு அமைப்போட  உறுப்புன்னு சொல்லுது.
அது இன்னொரு வகையான தன்னம்பிக்கையை குடுக்குது. நான் பெரிய ஆள்னு நினைச்சுக்கிடுறப்ப சில சமயம் தோல்விகளிலே
நம்ம தன்னம்பிக்கையே அழிஞ்சிடும். ஆனா கீதை குடுக்கிற தன்னம்பிக்கை  அழியவே அழியாது. எது உங்களுக்கு உண்மையான
சந்தோஷத்தை குடுக்குதோ, எதைச் செஞ்சா நீங்க நிறைவா செய்ய முடியுமோ அதை செய்ங்க.அதான் கீதையும் சொல்றது.
எதை செஞ்சா நீங்க நிறைவா உணர முடியுமோ, எதை நீங்க முழுமையா ஈடுபட்டு செய்ய முடியுமோ அதை செய்ங்க. அது தான் உங்க தன்னறம்.
———————————-
கிட்டத்தட்ட இதே போன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. எங்கள் பிரியமான மகள் தனது  16வது வயதில், எந்தவித அறிகுறியும்
முன்கூட்டி தெரியாமல், திடீரென்று மூளையில்  ரத்தக் குழாய் வெடித்து, 24 மணி நேரத்துக்குள் இறந்து போனபோது – வாழ்வே இருண்டு போனது. இனிமேல் வாழவே முடியாது என்று எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கினேன்.
சின்னஞ்சிறு குருத்தை அழித்து விட்டாயே - எங்கள் பாசக்குழந்தையை பறித்து விட்டாயே - உனக்கு எதற்கு பூஜையும், பிரார்த்தனையும்
என்று – எல்லாவற்றையும் நிறுத்தி விட்டேன். கோவிலுக்குப் போவதையும் விட்டு விட்டேன். தற்கொலை எண்ணமும் சில சமயம் வந்தது.
ஆனால் எனக்கு இன்னும் ஒரு மகள் இருந்தாள். மனைவி இருந்தாள். நானும் போய் விட்டால் - அவர்கள் நிலை ?
சுவாமி சின்மயானந்தாவின் எழுத்துக்களில் எனக்கு மிகுந்த பற்றுதல் உண்டு.அவரது கீதை விளக்கங்களை நிறைய
வாசித்திருக்கிறேன். முன்பு எத்தனையோ முறை வாசித்திருந்தபோதெல்லாம் தோன்றாத ஒரு எண்ணம் ஒரு சமயம்
திடீரென்று தோன்றி என்னை மீண்டும் நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டு வந்தது. நாம் வாழ்வது நமக்காக மட்டுமே என்று
நினைப்பது தானே இத்தனை துன்பங்களுக்கும் காரணம் ?
நாம் வாழ்வது நமக்காக மட்டுமல்ல - மற்றவர்களுக்காகவும் சேர்த்து தான் என்று எண்ணி வாழ ஆரம்பித்து விட்டால் -
சொந்த துக்கம் எதுவுமே பெரிதாகத் தோன்றாது அல்லவா ? செடி, கொடி, மரம், பூ, புழுக்களால் கூட  இந்த சமூகத்திற்கு பயன் இருக்கும்போது,
மனிதனாகப் பிறந்த நாம் மற்றவர்களுக்கு, சமுதாயத்திற்கு எந்த விதத்திலாவது பயனுள்ளவராக இருக்க வேண்டாமா ?
மூளை வேறு – மனம் வேறு. மூளை எப்போதும் சுயநல நோக்கிலேயே யோசிக்கும். எதைச் செய்தால் நமக்கு லாபம் என்றே யோசிக்கும்.
மனம் நல்லது கெட்டதை நினைக்கச் சொல்லும். பிறரைப் பற்றி கவலைப்படும். தர்மம் அதர்மம் பற்றி யோசிக்கும்.
எனவே எதைச் செய்தாலும் -மூளை சொல்வதை மட்டும் கேட்காமல், மனதைக் கேட்டு, மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செயல்பட்டால் -
நம்மால் பிறருக்கு எந்த விதத்தில் உதவியாக இருக்க முடியும் என்று ஒரு மனிதன் யோசித்து
செயல்பட்டால் – அது அவனுக்கும் நிம்மதி, சமுதாயத்திற்கும் பலன். நம்மால் என்ன பெரிதாகச் செய்ய முடியும்
என்று யோசிக்கவே வேண்டாம். மனதில் தோன்றியதைச் செய்யலாம். அக்கம் பக்கத்தில் – 4 ஏழைக்குழந்தைகளுக்கு
இலவசமாகப் பாடம் சொல்லிக்கொடுக்கலாம். வயதானவர்களுக்கு, ஆதரவில்லாமல் தனியே துன்பப்படுபவர்களுக்கு ஆதரவாக இருக்கலாம்.
ஆறுதலாக நாலு நல்ல வார்த்தைகள் சொல்லலாம். மருத்துவ மனைகளுக்கு போக, வர உதவலாம். வாரம் இரண்டு வேளை யாராவது 2 ஏழைகளுக்கு சோறு தரலாம். இரண்டு குடிகாரர்களையாவது - போதைப் பழக்கத்திலிருந்து மீட்க முயற்சி செய்யலாம்.
தெரிந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தால், மறக்காமல்,உணர்ச்சி வசப்படாமல், அவர்களின் கண்களை தானம் செய்ய உதவலாம். ஏற்கெனவேயே சமூகப்பணி செய்யும் குழுக்கள் எதனுடனாவது இணந்து, நம்மால் முடிந்ததை செய்யலாம்.
யோசித்தால் – நிறைய தோன்றும். ஆரம்பித்து விட்டால் அதில் சுகம் தெரியும். இப்போதெல்லாம் வாழ்க்கை எனக்கு சுமையாக
இல்லை. கடந்ததை எண்ணி வருந்துவதில்லை. எது நடந்தாலும் அமைதியாக எதிர்நோக்க முயற்சிக்கிறேன். என் மனம் ஏற்றுக்கொள்வதை மட்டுமே செய்ய முயற்சிக்கிறேன். எதைச் செய்தாலும், அதை விரும்பி, முழு மனதுடன் செய்கிறேன் - முழு ஈடுபாட்டுடன் செய்கிறேன்.
இந்த வலைத்தளத்தில் எழுதுவதை கூட - ஒரு சமுதாய நலனாக எண்ணிச் செய்கிறேன். இறுதி நாள் வரும் வரை இப்படியே வாழ
வேண்டும் என்று விரும்புகிறேன். நாளைய தினம் தீபாவளித் திருநாள் - எல்லாருக்குமே மறக்க முடியாத நாள் தான். ஆனால் -
எங்கள் குடும்பத்திற்கு ஒரு வித்தியாசமான மறக்க முடியாத நாள் - இது எங்கள் மகள் அர்ச்சனா மறைந்த நாள்.
இருந்தாலும் முன்பு போல் இப்போது இது என்னை பாதிக்கவில்லை- நடந்ததை வாழ்க்கையின் இயல்பு என்று
ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்திருக்கிறது. அன்பும், பாசமும், அறிவும், அழகும் ஒருங்கே சேர்ந்த ஒரு பெண் குழந்தையுடன்
16 வருட காலம் சேர்ந்து வாழும் பாக்கியத்தை எங்களுக்கு கொடுத்த இறைவா உனக்கு நன்றி - என்று கூறும் பக்குவத்தை கொடுத்திருக்கிறது.
உண்மை தான் - உலகின் சிறந்த தன்னம்பிக்கை நூல் – கீதை தான்

No comments:

Post a Comment